நூறு ஆலயம் போந்திருந் தென்ன?
ஆயிரம் கடன்கள் நேர்ந்திருந் தென்ன?

முன்னம் ஆயிரம் ஆட்கள் இருந்தென்ன?
மூதுரை கோடி முதியவர் உரைத்தென்ன?

வண்டி வாகனம் ஆயுதம் பெரும்படை
மண்டிய செல்வம் பன்னுறு முயற்சிகள்

கொண்டிருந் தென்ன தினம் முயன்றென்ன?
மண்டிய இருளை எங்ஙனம் விரட்டுவை?

வீடுறு தெய்வம் வேண்டி அழுதென்ன ?
காடெலாம் ஏகி கடுந்தவம் புரிந்தென்ன ?

தாடி வைத்தவர் பேச்சுரை கேட்டென்ன ?
மூடிய பூடகம் முட்டி முயன்றென்ன?

வேண்டிய யோகம் வீணில் செய்தென்ன
வீட்டார் மெச்சிட வேடங்கள் பூண்டென்ன ?

வண்டிப் புத்தகம் வாங்கிப் படித்தென்ன
உண்டியல் அறிவால் கரிதுளி அறிந்தென்ன?

வேதம் யாவையும் ஒப்புவித் தென்ன
வாதங்கள் புரிந்து மேடை ஒளிர்ந்தென்ன ?

கோவில் கருவறை பழியாய் இருந்தென்ன
நாவில் ஒருமொழி அசைத்துக் கிடந்ததென்ன?

நோக்கம் சிறந்தென்ன நேர்வழி நடந்தென்ன?
ஆக்கமும் ஊக்கமும் பொருந்தியே யிருந்தென்ன?

தெய்வம் தொழுதென்ன தேய்பிறை கழிந்தென்ன
போய்த்தவம் புரிந்தென்ன அடியாரோ டிருந்தென்ன?

எண்ணம் சரியின்றி என்னதான் நீமுடிப்பாய்?
கண்ணொரு குருவின்றி வண்ணம் உணருவையோ?

தக்கதோர் தகவுதனை அறியாத நாள்வரையும்
பக்கத்தில் இருந்தாலும் அருளைத்தான் அறிகுவையோ?

கைபிடித்து உயர்த்துகிற குருஒருவன் வரும்வரையும்
மெய்ப்பொருளை யாரறிவார் திசைதான் தெளிவாரோ?

-Yozen Balki

20th Feb 2015