இரு சாராருக்கு இடையில் ஒரு பிரச்சினை எழும் போது தீர்வு காண்பது யார்? எது நியாயம் என்று எப்படி வரையறை செய்வது? அதையிங்கு ஆராய்வோம்!

1 . இந்தியா பாகிஸ்தான் (Kashmir conflict) எல்லைப் பிரச்சினை!

2 . கேரள-தமிழக முல்லைபெரியாறு ( Mullapperiyar dam) பிரச்சினை!

அல்லது உனக்கும் எனக்குமான ‘கருத்து’ வேறுபட்டு  பிரச்சினை!

அட! எது வேண்டுமானாலும் இருக்கட்டுமே!

நான் ஒரு படகில் என் நண்பர்களோடு சென்று கொண்டு இருக்கையில் இன்னொரு படகில் நீங்கள் வந்து மோதி அதனால் சண்டை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்! நான் எனது படகோட்டி மற்றும் எனது நண்பர்களுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன்! நீங்களும் அது போலத்தான் உங்கள் ‘படகுக்கு’ ஆதரவாகப் பேசுவீர்கள்! இது மனித இயல்பு!

இரண்டு வட்டங்களாக அங்கு நாம் இருவரும் செயல்படுகிறோம்!

இப்படியாக பலப் பல வட்டங்கள் இந்த உலகில் இருந்து கொண்டே தான் இருக்கும்! இன்னும் கேட்டால் எனக்கு ஆதரவான சில வட்டங்களும் உங்களுக்கு ஆதரவான சில வட்டங்களும் இந்தப் பிரச்சினையில் கூப்பிடாமலேயே வந்து சேர்ந்து கொண்டு அவரவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வாதங்களை எடுத்து வைப்பார்கள்!அதனால் பிரச்சினைக்கு எப்படி நியாயமான தீர்வு கிடைக்கும்?

மேற்படி இருவரைத் தாண்டிய ஒரு பொது மனிதனை/மனிதர்களைத் தேடி அவன் சொல்லும் தீர்வை இருவரும் மனப்பூர்வமாய் ஒத்துக் கொள்வதாய் இருந்தாலொழிய இந்தப் பிரச்சினையில் ஒரு போதும் தீர்வு ஏற்படாது!

அதற்கென்று இரண்டு வட்டங்களையும் தாண்டிய, ஒரு புத்தருக்கும், ஒரு இராம கிருஷ்ண பரமஹம்சருக்கும் நாம் எங்கே போவது?

சரி!அதுபோன்று, அப்படி உலகில் ஒரு பொது மனிதர் சொல்லும் நியாயத்தையும் யார் இங்கு ஒத்துக் கொள்கிறார்களாம்? ஏதேனும் முன்மாதிரிகள் அதுபோன்று உலகில் உண்டா?

நாடுகளிடையே பூசல், பிரச்சினை என்று வரும்போதும் ஐக்கிய நாடுகள் சபையே ஆனாலும், எந்த நாட்டை ஆதரித்தால் தம்மிடம் வந்து பெரிய நாடுகள் சண்டை போடாதோ அந்த நாடுகளை ஆதரிப்பதும், நாதியற்ற நாடுகளை/மக்களை கை கழுவி விடுவதும் நாம் பார்க்காததா என்ன? ஈழப் பிரச்சினையில் அது தானே நடந்தது-நடந்து கொண்டு இருக்கிறது! தமிழர்களின் பூர்விக பூமியிலேயே அவர்கள் அடிமைகளாக்கப் பட்ட அநியாயத்தை எந்த நாடுகள் கண்டித்தனவாம்?”வந்து சேர்ந்தவன் அடிக்கும் போது, இருந்து வாழ்பவன் அதை தடுத்துக் கொள்ளும் எல்லாவித முயற்சிகளும் தவறு”,  என்று வாதிடும் புல்லர்கள் இருக்கும் உலகம் தானே இந்த உலகம்?

(சதாம் உசேன் ( Saddam Hussein) செய்த மாபெரும் தவறு என்னவென்று யாருக்காவது தெரியுமா? அமெரிக்காவுக்கு வேறு சில உள்நோக்கங்கள் இருந்தன! ஆனால் அதைச் சொல்லாமல், ஏதோ ரசாயன குண்டுகளை சதாம் மறைத்து வைத்து இருக்கிறார் என்று ஒரு ‘சப்பை’ காரணத்தைச் சொல்லி அமெரிக்கா உள்ளே நுழைந்து குண்டுகள் போட்டு ஈராக்கை அழித்தது. அவரை கைது செய்து ஒப்புக்கு ஒரு விசாரணை நடத்தி தூக்கிலிட்டுக் கொன்றது! பின்னர் அப்படி எந்தக் குண்டுகளும் அங்கு கிடைக்கவில்லை என்று ‘கூலாக’ சொல்லிவிட்டு அடுத்த நாட்டின் மீது ‘தாதா வேலை’  பார்க்கப் போய்விட்டது; ஒரு வருத்தம் கூட எங்கும் தெரிவிக்க வில்லை! அதற்காக, எந்த ஐ.நா. அமேரிக்கா மீது போர் தொடுத்தது அல்லது கண்டனம் தெரிவித்தது ?)

ஆக,  இந்த இலட்சணத்தில், பெரும் அறிஞர்கள் அமர்கிற ஐ.நா போன்ற உலக சபைகளிலேயே நியாயம் நீதி எடுபடாத போது, பிற சிற்சிறு அமைப்புகள் மற்றும் தனி மனிதர்கள் இடையில் எப்படி நியாயம் எடுபடப் போகிறது? அது ஒரு வெறும் வீண் கனவே ஆகும்!

“தடி எடுத்தவன் தண்டல்காரன்” என்பது போல, ஆட்களைக் கூட்டி அல்லது நாடுகளைக் கூட்டி தனது சக்தியைப் பெருக்கிக் கொள்பவனைப் பார்த்து இந்த உலகம் அஞ்சும்; ஆதரிக்கும்! மற்றபடி அவனிடம் இருக்கும் உண்மையை யாரும் ஆராய்ந்து ஆதரிப்பதில்லை ; அது மனிதர்கள் எவராலும் நாடுகள்/அமைப்புகள் எவற்றாலும் முடியவும் முடியாது!

உலகம் இப்போதும் எப்போதும் அப்படித்தான்!

இனியும் அப்படியே இருக்கும்!மகாபாரத காலத்திலேயே துவாபர (Dvapara Yuga) யுகத்தில் தர்மம் இரண்டு கால்களில் கூட நிற்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது !! அன்றைக்கே, துரியோதனாதியர் நூறு பேருக்கு பஞ்சபாண்டவர் அஞ்சு பேர் தான்! அதாவது நூறு கெட்டவர்கள்-ஐந்து நல்லவர்கள்!(என்ன விகிதம் இது- சீ!சீ! )இப்போதோ கலி யுகம்!தர்மத்துக்கு ஒரு காலும் இல்லாமலேயே தவழ்ந்து செல்லவேண்டிய துர்பாக்கியம் போலும்!
அது நல்லவர்களை, நியாய தர்மத்தை எப்போது சென்றடையப் போகிறதோ?

-யோஜென் பால்கி 
yozenbalki